Skip to content
Home » குஜராத்தில் இன்று….நமோ பாரத் ரேபிட் ரெயில்….. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் இன்று….நமோ பாரத் ரேபிட் ரெயில்….. பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து இன்று  பிற்பகல்  இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி  தொடங்கி  வைத்தார். ரயிலை தொடங்கி வைத்த மோடி அந்த ரயிலில் பயணித்தார்.

இந்த நிலையில் வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரெயில்வே, அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும். இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்படுகிறது.

110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படும். சனிக்கிழமை புஜ் நகரில் இருந்து புறப்படாது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்படாது.

இந்த ரெயில் மற்ற ஆறு நாட்களில் காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும். காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும்.

இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பயணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *