மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வடகாளி கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகன் கலியமூர்த்தி (57). கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகிய 2 மகள்கள் உள்ளனர். மனைவி 20 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டதால் தந்தை இறந்த நிலையில் தன் தாயார் பார்வதியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கலியமூர்த்தியின் தந்தையான வேலுவின் சகோதரர் சுப்பரமணியன்(90) மற்றும் குடும்பத்தார் கலியமூர்த்தியின் 3ஆயிரம் சதுர அடி இடத்தை தனக்கு எழுதிதர வேண்டும் என்று சொல்லி பல ஆண்டுகளாக தகராறு செய்து கலியமூர்த்தியை அடிக்கடி தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கலியமூர்த்தி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார். மாத்திரை சாப்பிடாவிட்டால் அவ்வப்பொது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சொத்து பிரச்சனை தொடர்பாக சுப்ரமணியன் அவரது மகன் கருணாநிதி மருமகன் சேட்டு ஆகிய 3பேரும் சேர்ந்து வயல் பகுதிக்கு சென்ற சுப்ரமணியனை பிடித்து அப்பகுதியில் உள்ள வாழைத்தோப்பிற்கு இழுத்து சென்று தண்ணீர் செல்லாத வாய்க்காலில் கைகாலை கட்டி உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்து பொதுமக்களால் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் கலியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கலியமூர்த்தியின் தாய் பார்வதி மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கலியமூர்த்தி தங்களை தாக்கிவிட்டதாக கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்திருந்த சுப்பிரமணியன், கருணாநிதி, சேட்டு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து மணல்மேடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது