பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு ரூ 26,000 உதவியாளர்களுக்கு ரூ 21 ஆயிரம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ 5 லட்சம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச டி.ஏ உடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருக்கும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் அல்லது பத்தாண்டு பணி முடிந்தவுடன் மேற்பார்வையாளருக்கான ஊதியம் வழங்க வேண்டும். மே மாத விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி வட்டார தலைவர் அர்ச்சனா, வட்டார செயலாளர் கலைவாணி,
சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். முடிவில் வட்டார துணைத் தலைவர் புவனேஸ்வரி நன்றி கூறினார்