Skip to content
Home » சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Senthil

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் திமுக அரசின் கவனத்தை ஈர்த்தும், அதைத் தடுக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக,

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை நாளிதழ்களும், ஊடகங்களும் தினசரி நிகழ்வுகளாகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

மேலும், திமுக அரசின் முதலமைச்சருடைய செயலற்றத் தன்மையால் ஒருசில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.

திமுக ஆட்சியில் தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அதிகரித்து வரும் கஞ்சா, போதை மாத்திரைகள், மெத்தபெட்டமைன் போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் பயன்பாட்டால், குற்றவாளிகள் தங்கள் நிலையை மறந்து திருட்டு, பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் சர்வசாதாரணமாக ஈடுபடுகின்றனர்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம். சமீப காலங்களில் ஊடகம் மற்றும் நாளிதழ்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினசரி செய்திகளாக வெளிவருவதைப் பார்த்து தமிழக மக்களுடன் நானும் மிகுந்த வருத்தமும், மன வேதனையும் அடைந்துள்ளேன்.

கடந்த 40 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய; சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், 24.9.2024 – செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில், சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.

திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், இளம் பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகளும், மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!