தமிழக டிஜிபி சங்கர் ஜூவால் வெளியிட்டுள்ள அறிக்கை… அடிப்படை கணினி அறிவு, தட்டச்சு, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர்களை குறி வைத்து, ‘டெலிகிராம், வாட்ஸாப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளம் வாயிலாக, இடைத்தரர்கள் மற்றும் சட்ட விரோத ஆள் சேர்க்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக விளம்பரங்களை வெளியிடுகின்றன. இவற்றை நம்பி ஏமாறுவோர், சுற்றுலா விசாவில் தாய்லாந்து வழியாக, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர். இத்தகைய ஆள் கடத்தல் மற்றும் மோசடிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள், இந்திய சைபர் குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் வாயிலாக, வெளிநாடுகளில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த, 1285 பேரின் விபரங்களை பெற்று, சரிபார்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுற்றுலா, மருத்துவ சிகிச்சை மற்றும் வியாபாரம் தொடர்பாக, வெளிநாடுகளில் இருப்பவர்கள் போக, 114 பேர் குறித்த விபரங்களை அறியும் பணியில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இளைஞர்களை வெளிநாடுகளுக்கு கடத்தியது தொடர்பாக, சென்னை, கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, விருதுநகர், அரியலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இடைத்தரகர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, மர்ம நபர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டவர்கள், 189 பேர் தமிழகம் திரும்பி உள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாடுகளில் உள்ள மர்ம நபர்கள், சைபர் குற்றவாளிகளாக வேலை செய்ய மறுப்பவர்களின் உடலில் மின்சாரம் பாய்ச்சி, பட்டினி போட்டு துன்புறுத்தியதுடன், சம்பளத்தில் இருந்து அபராத தொகையை பிடித்தம் செய்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், மர்ம நபர்கள், இந்திய வங்கி கணக்கு வாயிலாக பண மோசடி செய்து, அதை, ‘கிரிப்டோ கரன்சி’யாக மாற்றியதும் தெரியவந்தது. அந்த வகையில், 2024 பிப்ரவரி வரை, 14 மாதங்களில், இந்தியாவில் இருந்து, 10,188 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். வெளிநாட்டு வேலை மோகத்தில் சிக்கி, உடல், மன ரீதியாக இன்னல்களுக்கு ஆளாகாமல் இருக்க, டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள, வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு, காவல் கண்காணிப்பாளரின், 94986 54347 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையத்தின் உதவியை நாட, இந்தியாவில் உள்ள உறவினர்கள், 1800 3093793 மற்றும் வெளிநாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், 8069009901 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 8069009900 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுக்கலாம். என டிஜிபி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.