கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் 2 சாதாரண கல்குவாரிகள் அமைப்பதற்க்கான பொதுமக்கள் கருத்துக்கேற்ப கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை ஏற்று கலந்து கொண்டு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், காவல்துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கல்குவாரி அமைப்பதற்கு ஆதரவாக ஒரு சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது பண்ணப்பட்டி கிராம இளைஞர்கள், பொதுமக்கள் குறுக்கிட்டு, தங்கள் ஊருக்கு சம்பந்தமில்லாத நபர்களை அழைத்து வந்து குவாரி
உரிமையாளர்களே திட்டமிட்டு குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பேசுவதாக எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலரிடமும் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அனைவரிடமும் கருத்துக்கள் கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, ஊர் பொதுமக்கள் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து கல்குவாரிக்கு எதிராக ஆட்சேபம் தெரிவித்தனர். புதிதாக அமைய உள்ள இரண்டு கல்குவாரிகளுக்கும், அருகில் குடியிருப்புகள் உள்ளதால் மக்கள் வாழ தகுதியற்ற நிலை ஏற்படும் என்று ஆட்சேபம் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் முகிலன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது, கருத்து கேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த கல்குவாரி சார்ந்த நபர் ஒருவர் குறுக்கீடு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை எதிர்த்து சமூக ஆர்வலர் முகிலனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஊர் பொதுமக்கள் குவாரி அமைவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது ஏற்கனவே பருவ காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது அருகில் கொடகனாறு ஆறு இருந்தாலும் நீர் சரியான முறையில் கிடைப்பதில்லை.பல்வேறு ஆவணங்களை மறைத்து குவாரிக்கு அருகாமையில் பள்ளிகள் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு. இதனால் குவாரி அமையக்கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.