திருச்சி பாலக்கரை மல்லிகை புரத்தை சேர்ந்தவர்கள் சரவணன், டேவிட், ராம்குமார். மூவரும் ஆட்டோ டிரைவர்கள். இவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டம் போட்டனர். இதற்காக இவர்கள் கவரிங் கடைகளுக்கு சென்று விலை உயர்ந்த கவரிங் நகைகளை வாங்கி உள்ளனர்.
பெரிய பெரிய நகைகளை வாங்காமல், 1 பவுன், ஒன்றரை பவுன் எடைகளில் தோடு, மோதிரம், காதில் அணியும் வளையம் போன்றவைகளை வாங்கி உள்ளனர். பின்னர் அவற்றை தங்கம் எனக்கூறி அருகில் உள்ள பல வங்கிகளில் அடகு வைத்து பணம் பெற்று உள்ளனர்.
இப்படியாக இவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், பிரபல தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் என பல இடங்களில் அடகு வைத்து பணம் பெற்று உள்ளனர். 500 ரூபாய்க்கு வாங்கிய நகைகளை
ரூ.20 ஆயிரத்துக்கு அடகு வைத்து பணம் பெற்று உள்ளனர்.
சில தினங்களுக்கு முன் வழக்கம் போல ஒரு பைனான்ஸ் நிறுவனத்துக்கு அடகு வைக்க போனபோது அங்குள்ள அப்ரைசர் நகையை ஆய்வு செய்தபோது அது கவரிங் நகை என கண்டுபிடித்து விட்டார். பின்னர் அவரை பிடித்து பாலக்கரை போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் அவரை விசாரித்தபோது, என் கூட்டாளிகள் 2 பேர் இருக்கிறார்கள் என அவர் உண்மையை கூற சரவணன், டேவிட், ராம்குமார் ஆகிய மூவரும் சிக்கி கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தபோது அவர்கள் போலி நகைகளை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை பெற்றிருப்பது தெரியவந்தது. ரூ,.30 லட்சம் பெறும் அளவுக்கு போலி நகைகளை அடகு வைத்து உள்ளனர். அவற்றை பல வங்கிகளின் அப்ரைசர்கள் கண்டுபிடிக்கவில்லை. கைது செய்யப்பட்ட 3 ஆட்டோ டிரைவர்களும் இன்று திருச்சி ஜேஎம்2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.