Skip to content
Home » சினிமாவில் பாலியல் தொல்லை….. காலம் காலமாக நடக்கிறது…. மலையாள நடிகை பேட்டி

சினிமாவில் பாலியல் தொல்லை….. காலம் காலமாக நடக்கிறது…. மலையாள நடிகை பேட்டி

  • by Senthil

மலையாள சினிமாவில் இணை இயக்குனராக இருப்பவர் தேவகி பாகி. ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார். இந்தநிலையில் கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது மலையாள சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நான் 7ம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலாக ஒரு மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அப்போது ஒரு உதவி டைரக்டர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அது எனக்கு மிகவும் வேதனையை தந்தது. 7ம் படிக்கும் ஒரு சிறுமியிடம் கூட இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்றால் சினிமாவில் உள்ளவர்களில் சிலர் எந்த அளவுக்கு மோசமான மனதுடன் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பிளஸ் ஒன் படிக்கும்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தின் டைரக்டர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். நான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அப்போது, சினிமாவில் இதெல்லாம் சகஜம்தான் என்றும், நடிகைகள் அனைவருமே இதைக் கடந்து தான் வந்துள்ளார்கள் என்றும் என்னிடம் ஏளனத்துடன் கூறினார்.

அது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக நான் அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி படப்பிடிப்புத் தளத்திலிருந்து வெளியேறி விட்டேன். அதன் பிறகு பலமுறை என்னை தொடர்பு கொண்டு நடிக்க வருமாறு அந்த டைரக்டர் அழைத்தார். ஆனால் நான் வர முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டேன். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து நான் ஆபாசம் என்ற படத்தில் நடித்த சில இளம் நடிகைகளிடம் பேசியபோது இப்போதும் சினிமாவில் அது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொண்டேன். நோ சொல்ல வேண்டிய இடத்தில் நோ சொன்னால்தான் இதிலிருந்து அனைவரும் தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!