புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார்.
போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25 கோடி உட்பட ரூ.59.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கானவிளையாட்டுப் போட்டிகளை, சிவகங்கை மாவட்டத்தில், இன்று அமைச்சர் உதயநிதி போட்டிகளை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில், 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டது.
இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழு போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்படுகின்றது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.
இந்த ஆண்டு 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பொது பிரிவினர் மற்றும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும் இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18,000 -க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
எனவே இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவரும் தங்களது திறமைகளை சிறப்பான முறையில் செயல்படுத்தி விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றிட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் சிறப்பான முறையில் விளையாட்டுப் விளையாடி வெற்றிபெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் .எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் .திலகவதி செந்தில் அ, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்.ஜெயலட்சுமி தமிழ்செல்வன், மாநகராட்சி துணை மேயர் .எம்.லியாகத் அலி, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், முதன்மைக் கல்வி அலுவலர் .கூ.சண்முகம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி து.செந்தில்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்