மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி. சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஆகஸ்ட் 19ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐ.சி.யு.வில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
72 வயதான சீதாராம் யெச்சூரியின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வரும் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1952ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சீதாராம் யெச்சூரி சென்னையில் பிறந்தவர். ஆந்திராவில் வளர்ந்த இவர் டில்லியில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். முதுகலை பொருளாதார படிப்பை டில்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் முடித்த அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
படிக்கும் காலத்தில் இருந்தே மாணவர் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்த சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றினார். ராஜ்யசபா உறுப்பினராக 2005ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக திகழும் சீதாராம் யெச்சூரி, பிரபல பத்திரிகையாளர் சீமா சிஸ்தியை திருமணம் செய்துள்ளார். இவரது மகன் ஆஷிஷ் யெச்சூரி கடந்த 2021ம் ஆண்டு கொரோனாவில் உயிரிழந்தார் . இவரது மகள் அகிலா வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றுகிறார்.