Skip to content

கரூர்….. ஆத்துப்பாளையம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

  • by Authour

கரூர் மாவட்டம், கார்வழி அருகில் ஆத்துப்பாளையத்தில், 600 ஏக்கர் பரப்பளவில், 1985ம் ஆண்டு அணை கட்டப்பட்டது. நொய்யல் ஆறு மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர், ஆத்துப்பாளையம் அணைக்கு வருகிறது. இதன் மூலம் கரூர் மற்றும் க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னுார், அத்திப்பாளையம், குப்பம், புன்னம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து கடந்த, 2000ம் ஆண்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. திரிப்புரா சாயக்கழிவு தண்ணீர் அதிகளவு கலந்து நொய்யல் ஆற்றில் சென்றதால் ஆத்துப்பாளையம் அணைக்கு 3,000 டி.டி.எஸ், உப்பு தன்மை கொண்ட சாயக்கழிவு நீர் வந்து சேர்ந்தது.

அணை நீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டதால், அணையில் தண்ணீர் திறந்து விடுவது கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின் நிறுத்தப்பட்டது.

மழை காலத்தில், நொய்யல் ஆற்றில் வரும் வெள்ள நீரை பாசனத்திற்கு திறக்க வேண்டும் என விவசாயிகள்

கோரிக்கை விடுத்து வந்தனர். நீதிமன்ற உத்தரவு பிறகு 15 ஆண்டுகளுக்கு பின் 2019 ல் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ஆத்துப்பாளையம் அணையில் அதிகளவு தண்ணீர் வந்ததால், அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், மாவட்டத்தின் கடைசி எல்லையான பந்தல்பாளையம் வரை வந்து அங்குள்ள குளத்தை நிரப்பியது.

26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.15அடியாக உள்ளது. நொய்யலில் இருந்து வரும் தண்ணீரின் உப்புத்தன்மை 627 டி.டி.எஸ் உள்ளது.

நாள் ஒன்றுக்கு அணையின் தற்பொழுது உள்ள நீர் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு நொய்யல் பிரதான கால்வாயில் 60 கன அடி அளவில் நீரை அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ திறந்து வைத்தார்.

இன்று திறக்கப்பட்டுள்ள நீர் டிசம்பர் 7 வரை  விடப்படும். 90 நாட்களில் முறைவைத்து நீர் திறக்கப்படுவதன் மூலம் புகளூர், மண்மங்கலம் வட்டத்தில் 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நொய்யல் பிரதான கால்வாயில் திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயில் 90 கன அடி வரை தண்ணீர் விடப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!