கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து தூத்துக்குடி பகுதிக்கு மீன்களை ஏற்றிச்சென்ற லாரி பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் புதூரில் கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்டது. மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஐஸ் கட்டிகளை வைத்து மீன்களை பதப்படுத்தி இந்த லாரியில் கொண்டு சென்ற போது அதிக வெப்பம் காரணத்தினால் ஐஸ் கட்டி உருக துவங்கியது இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் கோமங்கலம் புதூர் பகுதியில் வாகனத்தை நிறுத்தி மீன் கழிவுகளுடன் கூடிய அந்த துர்நாற்றம் வீசக்கூடிய நீரை சாலையோரம் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட கிராம மக்கள் பத்துக்கு மேற்பட்டோர் அந்த லாரியை சிறைபிடித்து கோமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் அசோக் மற்றும் லாரியை கைப்பற்றி கோமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதேபோன்று இந்த ஓட்டுநர் மூன்று முறை இதே பகுதியில் கழிவு நீரை திறந்து விட்டு சுகாதார சீர்கேடை ஏற்படுத்தி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓட்டுநர் அசோக் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதே போல ஊராட்சி நிர்வாகமும் சுமார் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.