மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சி.பி.ஐ.,யிடம் புகார் அளித்தார். அதில், ‘மும்பையில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர் சச்சின் கோகுல்கா தலைமையிலான குழுவினர், வழக்கு ஒன்றிற்காக என்னை கடந்த 4ம் தேதி அழைத்துச் சென்றனர். அந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்கவும், எனக்கு சாதகமாக செயல்படவும், 80 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டனர். ‘பேச்சுக்கு பின், 60 லட்சம் ரூபாயாக குறைத்தனர். நான் உறவினரிடம் பேசி முதல் தவணையாக 30 லட்சம் ரூபாய் தந்த பின் தான் என்னை மறுநாள் விடுவித்தனர். தற்போது மீத லஞ்ச பணத்தை கேட்டு வருகின்றனர்’ என கூறியிருந்தார். இதையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனைப் படி, 20 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் தயாராக இருப்பதாக மும்பை மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தைச் சேர்ந்த சி.ஏ., ராஜ் அகர்வாலுக்கு தொழிலதிபர் நேற்று தகவல் தந்தார். ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சார்பாக, 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை அவர் பெற்ற போது சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவரை வைத்து ஜி.எஸ்.டி., கண்காணிப்பாளர் சச்சின் கோகுல்காவுக்கு லஞ்சம் தரப்பட்டு, அவரையும் சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இந்த லஞ்ச வழக்கில் மும்பை மத்திய ஜி.எஸ்.டி., அலுவலகத்தின் கூடுதல் கமிஷனர் தீபக் குமார், இணை கமிஷனர் ராகுல் குமார், சச்சின் உட்பட நான்கு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரிக்கிறது.