Skip to content
Home » நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை வழியாக, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தேர்விற்கு / பள்ளிக்குவராத அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி” என்ற திட்டம் கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி அரியலூர் கோட்டத்தில், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் கட்டம் (Phase I) 09.09.2024 நாளையும், இரண்டாம் கட்டம்; (Phase II) 19.09.2024 நாளன்றும், இதேபோன்று உடையார்பாளையம் கோட்டத்தில், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் கட்டம் (Phase I) 12.09.2024 நாளன்றும், இரண்டாம் கட்டம் (Phase II) 23.09.2024 நாளன்றும் நடைபெற உள்ளது.

மேலும், முதல் கட்ட (Phase I) முகாம் நாளன்று உயர்கல்வியில் சேராத அனைத்து மாணவர்களும் பங்கேற்கவும், இரண்டாம் கட்டத்தில் (Phase II) முதல் கட்டத்தில் வராதவர்கள் அல்லது தவறவிட்டவர்கள் பங்கேற்கவும் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டமானது, மாணவர்களுக்கு விருப்பமான கல்விக்கு வழிகாட்டுதல், மற்றும் ஆதரவளித்தல், அதற்கான ஆதாரங்களை தொடர்புடைய துறைவழியாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் எதிர்கால நோக்கங்கள் குறித்த தகவல்களை அனைத்து துறைகள் வழியாக வழங்கி, கல்வி வழியாக பொருளாதாரத்தை வளப்படுத்த மாணவர்களுக்கு தேவையான தெளிவான, நல்லமுடிவுகளை எடுக்க உதவும் வகையிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முகாம் நடைபெறும் இடங்களில் தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்கல்வி மாணவர்களுக்கு சேர்க்கையின் போது உதவித் தொகை எளிதாக பெறுவதற்கான வழிமுறைகள் தெரிவிப்பதற்கான அரங்கம் அமைத்திடுதல், பல்வேறு படிப்புகளின் காலியிடங்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு நிகழ்வு நாளன்று விளக்கமளித்து அவர்களுக்கு சேர்க்கை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், உயர்கல்வியில் சேராத மாணவர்களை அணி திரட்டும் (Mobilze) பணிகளை மேற்கொள்ளுதல், முகாம் வளாகத்தில் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்குவதற்கு அனைத்து வசதியுடன் (Computer, Printer, Scanner etc.) இ-சேவை மைய அரங்கம் அமைத்திடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளுவது தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார். எனவே இத்திட்டத்தில் 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய கல்வியாண்டுகளில் உயர்கல்வியில் சேராத அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *