தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்து தேர்தல் ஆணையத்தில் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக்
கழகத்தை பதிவு செய்து தேர்தலில் போட்டியிடுவதற்கான அங்கீகாரத்தை வழங்கிய நிலையில், அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிக்கையாக கட்சியின் தலைவர் விஜய் இன்று வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து விஜய் அறிக்கை வெளியிட்ட அடுத்த நிமிடம், கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டான அருகில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்டத் தலைவர் மதியழகன் கூறுகையில், கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது குறித்து விஜய் அறிவித்துள்ளார். கட்சியின் முதல் மாநில மாநாடு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கரூர் மாவட்டத்திலிருந்து தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் மாநாட்டுக்கு செல்ல இப்போதே தயார் நிலையில் உள்ளனர். ஆனால், மாநில மாநாட்டில் பாதுகாப்பு கருதி தலைமை எவ்வளவு நபர்களை அழைத்துச் செல்ல அறிவுறுத்துகிறார்களோ, அதற்கான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம் என்றார்.