திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளது. பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு திமுக தலைமை திட்டமிடுவதாக சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுக் வகையில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற வகையில் 117 தொகுதிகளாக பிரிப்பதற்கும் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. புதிய மாவட்டங்கள் உருவாக்கம் குறித்து ஒருங்கிணைப்புக்குழு முடிவெடுத்து தலைமைக்கு பரிந்துரைக்கும் என மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு புதிய மாவட்டங்கள் மட்டுமல்லாது, சிறப்பாக செயல்படாத மாவட்டச்செயலாளர்கள் மாற்றமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எந்த மாவட்டச்செயலாளர் மாற்றப்படப் போகிறார்? யாருக்கு மாவட்டச்செயலாளராக வாய்ப்பு? என்ற கேள்விகள் கட்சியினர் மத்தியில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருகின்றது. பெரிய மாவட்டங்களாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் அமைந்துள்ளது. முதலமைச்சருக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோரின் மாவட்டங்கள் பிரிப்பு தொடர்பாக சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தாலும் பிரிக்கப்படாமலே உள்ளதை உணர்ந்த சில நிர்வாகிகள் புதிய மாவட்டங்கள் உதயத்திற்கு வாய்ப்பிருக்காது என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறார்கள்.
அதே நேரம் செயல்படாத மாவட்டச்செயலாளர்கள் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்டச்செயலாளர் மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள், புகாருக்குள்ளான மாவட்டச்செயலாளர்களின் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
கடைசியாக திமுக தலைவரால் வெளிப்படையாக கண்டிக்கப்பட்டவர்கள் 6 மாவட்டச்செயலாளர்கள். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற தொகுதி பார்வையாளர்கள், மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை வேலு ஆகியோரை கண்டித்ததாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் புகார்களுக்குள்ளாகும் மாவட்டச்செயலாளர்களை அறிவாலயத்திற்கு அழைத்து டோஸ் விட்டு வருகிறார் முதல்வர்.
இதில் தொடர்ந்து புகார்களுக்குள்ளாகி வருகிறார் ஈரோடு வடக்கு மாவட்டச்செயலாளர் நல்லசிவம். திமுகவில் தெற்கு, வடக்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ஈரோடு. 2022ல் நடைபெற்ற உட்கட்சி தேர்தலின்போதே ஈரோடு மேற்கு மாவட்டம் உதயமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், அதுகுறித்து முடிவெதும் எடுக்கப்படவில்லை. தெற்கு மாவட்டச்செயலாளராக இருப்பவர் அமைச்சர் முத்துசாமி. வடக்கு மாவட்டச்செயலாளராக இருப்பவர் என்.நல்லசிவம்.
நல்லசிவத்தின் மீதான புகார்கள் புதியதில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே மாவட்டச்செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என கூறி ஒன்றிய செயலாளர்கள் ராஜினாமா செய்யப்போவதாக தகவல் வெளியானது. அதன் காரணமாகவே காணொலி வாயிலான கூட்டத்தில் நல்லசிவத்தை கடிந்து கொண்டார் முதல்வர் என்கிறார்கள். நல்லது, கெட்டதிற்கு கட்சிக்காரர்கள் இல்லம் செல்லாதது, அதிமுகவினருடன் இணைந்து செயல்படுவது, அவர்களின் மண்டபங்களிலேயே கூட்டங்கள் நடத்துவது, பொது உறுப்பினர்கள் கூட்டத்தையே நடத்தாமல் தவிர்த்து வந்தது என ஏகப்பட்ட புகார்களை தெரிவிக்கின்றனர் ஈரோடு திமுகவினர்.
என். நல்லசிவம் மாற்றப்பட்டால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், என காத்திருக்கிறார்கள் சில மூத்த நிர்வாகிகள். திமுக விவசாய அணி இணை செயலாளராக இருக்கும் கள்ளிப்பட்டி மணி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலையில் இருக்கிறார் என்கிறார்கள் தலைமைக்கழக நிர்வாகிகள். ஆர்.எம். வீரப்பனுடன் இணைந்து பணியாற்றிய மணி 1998 ம் ஆண்டு ஜனவரி 18 ல் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியைக் கொண்டு கோபிச்செட்டிபாளையத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறக்கல் காரணமாக இருந்தவர். கருணாநிதியால் முதன் முதலாக திறக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை அது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர். சிலை திறப்பால் கருணாநிதியின் உள்ளத்தில் தனி இடம் பிடித்த கள்ளிப்பட்ட மணி, திமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். எந்த பொறுப்பும் வைக்காமல் தொடர்ந்து பல்வேறு பணிகளை ஆற்றி வந்த கள்ளிப்பட்டி மணிக்கு 2019 ம் ஆண்டு திமுக விவசாய அணியின் இணைச் செயலாளர் பொறுப்பை வழங்கினார் மு.க.ஸ்டாலின்.
நெல் அறுவடை காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளுக்கு உதவி வரும் மணி, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இரு சக்கர வாகன பேரணியை நடத்தி ஸ்டாலினின் பாராட்டைப் பெற்றுள்ளார். மக்களவைத் தேர்தலில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும் பணியாற்றி நன்மதிப்பை பெற்றுள்ளார். திமுக தலைவரால் பெயர் சொல்லி அழைக்கப்படும் வட்டத்தில் உள்ள மணிக்கு மாவட்டச்செயலாளர் பொறுப்பு தரவேண்டும் என்பது மூத்த நிர்வாகிகளின் எண்ணமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 20 மாவட்டங்களில் உள்ள வேட்டுவக் கவுண்டர் சமுதாயத்தை சார்ந்தவரான கள்ளிப்பட்டி மணிக்கு பொறுப்பு கிடைத்தால், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை முழுமையாக பெற முடியும் என்பதுடன், தொடர்ந்து செங்கோட்டையனை எதிர்த்து அரசியல் செய்து வரும் மணியால் அவரின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நபராகவும் இருப்பார் என்கின்றனர். கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்த விரும்பும் தலைமைக்கான சரியான தேர்வாகவே இருக்கும்.