சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றினார். ” மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு: ஆன்மீக தேடல் குறித்துப் பேசிய தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு, தன்னை உணர்தல் என்பது குறித்துப் பேசியிருந்தார். அங்கிருந்த மாணவ- மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்துள்ளார். அவரது பேச்சைக் கேட்டு பலர் கண்ணீர்விட்டுள்ளனர்.
நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது, யோக தீட்சை தருகிறேன் என்றெல்லாம் அவர் பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு ஆசிரியர் மட்டும் வந்து மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பள்ளியில் வந்து எதற்காக மறு பிறவி, பாவ புண்ணியம் பற்றிப் பேசுகிறீர்கள்.. அரசுப் பள்ளியில் ஆன்மீகம் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மற்ற ஆசிரியர்கள் வந்து கேள்வி எழுப்பிய ஆசிரியரை மட்டும் சமாதானம் செய்தனர்.
மகா விஷ்ணுவும் தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார். கொந்தளித்த நெட்டிசன்கள்: தொடர்ந்த அவர், “இத்தனை காலம் ஆசிரியர்கள் சொல்லித் தராததை நான் தருகிறேன்.. நியாயப்படி நீங்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால், என்னுடன் வாக்குவாதம் செய்கிறீர்கள்” என்றெல்லாம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். இந்த வீடியோவை மகா விஷ்ணுவே தனது சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.