கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சியவர்ணா. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கரூர் மாநகராட்சி சுகாதார அதிகாரியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை லட்சியவர்ணா பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியான ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் துவங்கி அவரது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பண உதவி கேட்டுள்ளார். சந்தேகத்தின் பேரில் நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவை போலியான சமூக வலைத்தள கணக்குகள் என்பது தெரிய வந்துள்ளது.
அதிகாரியின் நண்பர் ஒருவருக்கு அவசரமாக பணம் அனுப்ப வேண்டிய நிலையில், தனது வங்கி கணக்கின் அதிகபட்ச எல்லையை கடந்து விட்டதால், பணம் அனுப்ப முடியாத சூழ்நிலை உள்ளதால் உதவி வேண்டும் என்று மர்ம நபர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதையடுத்து தனது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் துவங்கிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி அதிகாரி இலட்சிய வர்ணா சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.