மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தேர்தலுக்காக இந்த சிலையை அவசர அவசரமாக நிறுவினார்கள் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் சிலை நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி சிலை இடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின. இதற்காக பிரதமர் மோடி மன்னர் சிவாஜியிடம் மன்னிப்பு கேட்பதாக மகாராஷ்ட்ராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.
சிலை விழுந்து நொறுங்கியது தொடர்பாக சிந்துதுர்க்கில் உள்ள மால்வன் போலீஸ் நிலையத்தில் சிற்பி, கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிற்பி தலைமறைவானார். மேலும் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் கடந்த மாதம் 31ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து சிலையை வடிவமைத்த சிற்பியை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சிற்பி ஜெய்தீப் ஆப்தே தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஜெய்தீப்பை கோா்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.