நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு லால்குடி திமுக உறுப்பினர் கூட்டத்தில் பேசும்போது, 2026ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடுமையானதாக இருக்கும். ஏற்கனவே பல கட்சிகள் திமுகவுக்கு எதிராக இருக்கிறது. புதிதாக ஒரு கட்சியும் வர இருக்கிறது. இதே கூட்டணி தொடருமா என்பதும் சந்தேகம் என்ற பொருளில் அவர் பேசியிருந்தார்.
அமைச்சர் நேருவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சர் நேருவிடம் இன்று கேட்டபோது அவர் கூறியதாவது:மழை காலத்தில் 20, 25 செமீ மழை பெய்தால் பிரச்னை ஏற்படாது. அதற்கு மேல் மழை பெய்தால் அதையும் சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் இப்போதே முன்னேற்பாடாக செய்யப்படுகிறது. திருச்சியில் பிஷப் ஹீபர் வாய்க்கால் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பாதாள சாக்கடை மேன்ஹோல் தற்போது 8 மீட்டருக்கு ஒரு இடத்தில் உள்ளது. அதில் இறங்கி அந்த இடத்தில் உள்ள அடைப்பை மட்டும் சரி செய்கிறார்கள். மற்ற இடத்தில் அடைப்பை சரி செய்ய முடியவில்லை என்றார்கள். இதற்காக இப்போது 4 மீட்டருக்கு ஒரு மேன்ஹோல் வைக்க சொல்லி இருக்கிறோம்.
மழை காலத்தில் சென்னையில் மின்சாரம் தடை செய்யப்படும்போது தகவல் தொடர்பு பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். அதற்காக ஜெனரேட்டர் வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க இடம் தேர்வு செய்துள்ளோம். அவர்களுக்கு பால் உள்ளிட்ட உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து 2 முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார் என அதிமுக கூறியதற்கு பதில் தான் லால்குடி கூட்டத்தில் கூறினேன். நாங்கள் மீண்டும் தளபதி ஆட்சியை அமைப்போம் என்றேன். தோழமை கட்சியை வேண்டாம் என்று நான் கூறவில்லை. நான் எப்படி அதை சொல்லமுடியும்?தலைவர் தான் கூட்டணியை முடிவு செய்வார். தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றேன்.
நீங்க நினைக்கிற பதிலுக்கு நான் தீனி ஆக முடியாது. நீங்கள் எதிர்பார்க்கிற பதில் என்னிடத்தில் வராது. 6 தேர்தல்களில் திமுக கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது. எனவே வரும் சட்டமன்ற தேர்தல் சவாலாக இருக்கும் என்று நான் சொல்லவில்லை. எளிதில் வெற்றி பெறுவோம். முதல்வரின் அத்தனை திட்டங்களும் பெண்களை சென்றடைந்து உள்ளது. பெண்கள் திமுகவுக்கு தான் வாக்களிக்கிறார்கள். எனவே மீண்டும் வெற்றி பெறுவோம்.
ஒரு நாளிதழ் கூட அமைச்சர் நேருவின் கருத்தை நாங்கள் பிரசுரித்தது தவறு என கூறி உள்ளது. என்னுடைய பேச்சு குறித்து ஆர்.எஸ். பாரதி கூட விளக்கி உள்ளார். அவர் இன்று என்னிடம் பேசினார்.
வலுவான கூட்டணியோடு இருக்கிறோம். 10 ஆண்டுகளாக இந்த கூட்டணி இருக்கிறது. கூட்டணி முடிவுகளை தலைவர் தான் எடுப்பார். நாங்கள் வேலை செய்கிற இடத்தில் இருக்கிறோம். ஆளுங்கட்சியாக இருந்தால் சிலர் நன்மை பெற்றிருப்பார்கள். சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காது. அதனால் அவர்கள் அதிருப்தி அடைவார்கள்.நாங்கள் அனைவரையும் அரவணைத்து தான் கட்சி நடத்துகிறோம். அனைவரையும் திருப்தி படுத்துவோம்.
ஒரு திருமண வீட்டுக்கு சென்றால் மணமக்களை வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறோம். வாழ்க என வாழ்த்துவதால், மணமக்கள் சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்ற அர்த்தமா?
இவ்வாறு அவர் கூறினார்.