அரசு பள்ளி மாணவர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, உறுதிமொழி எடுப்பதற்கு கடும் கண்டனத்தை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திராவிட மாடல அரசு, பள்ளிக் கல்வித் துறையை ஆன்மீக துறையாக மாற்றுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தங்களது கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் அடிப்படையில், சுற்றறிக்கையை அனுப்பி உள்ளனர்.
அதில் விநாயகர் சதுர்த்தி விழாவை, சுற்றுச்சூழல் கெடாதவாறு எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று விளக்கியதோடு, மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து, அதன் போட்டோவை பள்ளிக்கல்வித்துறை வெப்சைட்டில் ஏற்ற வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் எடுக்கும் உறுதிமொழியில், பத்தாவது உறுதி மொழியாக, கொண்டாடுவோம் கொண்டாடுவோம் விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:
சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பள்ளிக்கல்வித்துறை மூலம் உறுதிமொழி எடுக்க புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதை எங்கள் பிள்ளைகள் கடைபிடிக்க தேவையில்லை.
பிஜேபி செய்வதை விட, கூடுதலாக திராவிட மாடல் அரசு செய்கிறது. பள்ளிக்கல்வித்துறையை ஆன்மீக துறையாக மாற்றுகின்ற அவசியம் ஏன் வந்தது?
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மாணவர்கள் கல்வி பயிலும் அரசு கல்வி நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்று உறுதிமொழி எடுக்க மாணவர்களை பயன்படுத்துவது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய, செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடுமாசு கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும். ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல், உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.