பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி, கள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 245 பயனாளிகளுக்கு
ரூ.2,23,37,145 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.ஸ்ரீ வெங்கட பிரியா பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் க.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
மக்கள் அரசு அலுவலர்களை தேடிச்சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கும் நிலையை மாற்றி மக்களைத் தேடி அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள் நேரில் வந்து, மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நடத்தப்படுவதே மக்கள் தொடர்பு திட்ட முகாம். இந்த நிகழ்வில் ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்கள் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், திட்டங்களில் பயன்பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று விரிவாக எடுத்துரைத்தார்கள்.
பெண் குழந்தைகளின் உயர்கல்வி கனவை நினைவாக்கும் “புதுமைப்பெண்திட்டம்“, மக்களின் வீடுகளுக்கே வந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் “மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்“, குழந்தைகளை ஆர்வமுடன், பசி இல்லாமல் பள்ளிகளில் கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்படும், “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்“, பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட எண்ணிலடங்கா மக்கள் நலத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சமூக நலத்துறை மற்றும் மருத்துவத் துறை சார்பிலும், பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை ஏற்படுவது குறித்தும், எவ்வாறு அதனை தவிர்ப்பது குறித்தும் இன்று விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சுய ஆரோக்கியம் பேணுதல் தொடர்பாக துறை சார்பாக தொடர்ந்து விளக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சுகாதாரம், ஊட்டச்சத்து, தன் சுத்தம் பேணி காப்பது குறித்து அறிந்து செயல்பட வேண்டும். பெண்கள் தாய்மை எய்துவதற்கு முன்பு உடல்நலனில் போதுமான அக்கறை எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறக்கும். ஊட்டச்சத்தை உறுதி செய் என்கிற திட்டத்தின் கீழ், பிறந்தது முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அதில் இப்பகுதியில் 8 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல ஒவ்வொரு கிராமத்திலும் கணக்கெடுப்பு நடத்தி மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கி, அதிக ஊட்டச்சத்து குறைபாடு ஆகாமல் தடுத்தும், ஊட்டச்சத்து குறைபாடே இல்லாமல் ஆக்குவதற்குமான நடவடிக்கைகளை துறை சார்ந்தவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் இதுவரை 3 தொடக்கக் கல்வி பயிலும் 112 பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்ததை நேற்று அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 69 மாணவ, மாணவிகள் என சேர்த்து, 181 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நலத்துறை சார்பில், செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டம் குறித்து, ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். புதுமைப் பெண் திட்டம் என்பது அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு உயர் கல்வி அளித்து பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல் குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல் பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல் ஆகும். இந்த ஆண்டு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் அனைத்து பெண்களும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) கோவிந்தம்மாள், , ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரெங்கராஜ், துணை வட்டாட்சியர் / வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன், மண்டல துணை வட்டாட்சியர் தங்கராசு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.