கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவை யூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டு தோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப்பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சட்டங்களும் புகையிலைப் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்க வழிவகை செய்யவில்லை. அந்த சட்டங்கள் தடை விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.