தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் இந்தளூர் மேல தெருவை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் சாய்ராம் (14). வேங்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
சாய்ராமுக்கு இன்று காதுக்குத்து நிகழ்ச்சி நடக்க இருந்தது. இந்நிலையில் சாய்ராம் தனது அண்ணன் முரளி உடன் இந்தலூர் கல்லணை கால்வாய் பாலம் பகுதியில் காலையில் குளிக்க சென்றுள்ளார்.
அண்ணன் தம்பி இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாய்ராம் ஆற்று நீர் வேகத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். இதை கண்டு பதறிப் போன முரளி கூச்சல் போட்டுள்ளார்.
பின்னர் கரைக்கு ஏறி பொதுமக்களிடம் முரளி தகவல் கூற உடன் அவர்கள் ஆற்றில் சாய்ராமை தேடி உள்ளனர். மேலும் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் சம்பவத்திற்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் ஆற்றில் இறங்கி சாய்ராம் தேடியுள்ளனர். சற்று தொலைவில் சாய்ராம் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்த பூதலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாய்ராம் உடலை மீட்டு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று காதுக்குத்து நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் சாய்ராம் இறந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.