தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 1991ம் ஆண்டில் தாராளமயமாக்குதல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில், தனியார் துறையின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.
தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபோது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது. இந்த தொழில் கொள்கைதான் மாநிலத்தின் புதிய தொழிற்சாலைகள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்புரட்சிக்கு இத்தொழில் கொள்கை வழிவகுத்தது. தொழில் வளர்ச்சியினை மாநிலத்தில் துரிதமாக்கியது, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெருந்திட்டங்களை ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. இப்பெருந்திட்டங்களைச் சார்ந்து உதிரி, பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாகும் சூழ்நிலை உண்டானது. எனவே அரசின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, “உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைந்து, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும்” என்கிற கொள்கையோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இதனை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பல அந்நிய முதலீடுகளை மாநில அரசு ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு மேலும் சில தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். சான் பிரான்ஸிக்கோ சென்ற முதல்வருக்கு, அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிற்பான வரவேற்பளித்திருந்தனர். பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதன்படி, ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் தொழில் மையங்களை அமைக்க உள்ளன.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம், வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து உடற்பயிற்சியை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சிகாகோ நகரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் ரைடு சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது..