கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட் மற்றும் சில்லறை மீன் மார்க்கெட்கள் என 51 கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மொத்த மீன் விற்பனை கடைகளில் 5 கடைகளில் கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 65 கிலோ அளவிலான மீன்கள் மற்றும் 4 சில்லறை மீன் விற்பனை
கடைகளில் சுமார் 38.05 கிலோ கெட்டுப்போன மீன்கள் என மொத்தம் 103.5 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் 50ஆயிரம் ரூபாய் எனவும் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த சில்லறை மற்றும் மொத்த வியாபார செய்யும் 9 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006, பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது போன்று கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.