சென்னை மாநகராட்சியில், குப்பைகளை எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அதிகாரிகள் குழுவுடன் இன்று சென்னை வந்தார்.
சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்போடு செயல்பட்டு வரக்கூடிய பயோ – சிஎன்ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, கர்நாடகா மாநிலத்தில் செயல்படுத்த திட்டம் செயல்படுத்த கர்நாடக குழு இந்த ஆய்வினை மேற்கொண்டது.
சென்னையில் சேகரமாகும் காய்கறி கழிவுகளை நொதிக்க வைத்து இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. சேத்துப்பட்டு பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் இயங்கி வரும் அந்த மையம் மூலம் நாள்தோறும் 4,800 கிலோ சுத்திகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த இயற்கை எரிவாயுவை 14 கிலோ எடை அளவிற்கு, ஒரு நாளைக்கு 324 சிலிண்டர்களில் அடைத்து இந்த மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆய்வுக்காக வந்த டிகே சிவக்குமாரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர் கூறும்போது, திடக்கழிவு மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் சென்னை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள். மேகதாது அணை கட்டினால், கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக நன்மை கிடைக்கும். இந்த பிரச்னையில் இப்போது வேறு எதுவும் நான் சொல்ல விரும்பவில்லை.