மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில், அதிகார மையத்தில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் நடிகைகள் உள்பட பெண் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். இதனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையுமே உலுக்கியுள்ளது. இதேபோன்று தெலுங்கு, தமிழ் சினிமா துறையிலும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகைகள் வலியுறுத்தி வருகின்றன. அந்தவகையில், தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான பாலியல் புகார்கள் உள்ளதாக நடிகை ரேகா நாயர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “அனைத்து மொழி சினிமாவிலும் பாலுயல் அத்துமீறல் உள்ளன. தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகள் முதல் இன்றுதான் படப்பிடிப்பு தளம் எப்படி இருக்கும் என்று தெரிந்த பெண் வரை அனைவரும் இதை அனுபவித்து கொண்டுதான் இருக்கிறார்கள். நான் குரல் கொடுத்தால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்படாது. அதனால் தான், சில நடிகைகளும் நமக்கு எதற்கு இந்த வேலை என்று இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் மட்டும் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் உள்ளன. மலையாளத்திலாவது, 10 முதல் 20 பேர்தான் சிக்கியிருக்கிறார்கள், ஹேமா கமிட்டி அறிக்கை போல தமிழ் சினிமாவில் அறிக்கை வெளியானால் 500க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள்” என்று தெரிவித்தார்.