Skip to content
Home » திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

  • by Authour

குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி  வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் குரங்கம்மை தொற்றுடன் வருகிறார்களா என்பதை ஆய்வு செய்து அவர்களை  தெரிவு செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. குறிப்பாக  வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம், கப்பல் மூலம் வருகிறவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. இந்த ஏற்பாடுகள் குறித்து  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திருச்சி விமான நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமானம் மூலம் திருச்சி வந்தார்.  அவரை கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுகவினர் வரவேற்றனர்.

அமைச்சர் கே. என். நேரு இன்று சென்னை செல்ல  விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு அமைச்சர் மா.சு. ஆய்வு மேற்கொண்டார். அதில் அமைச்சர்  மகேஷ், கலெக்டர்  பிரதீப் குமார் ஆகியோரும் கலந்து கொண்டார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்  கூறியதாவது:

உலக அளவில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வருவதால், உலக பொதுசுகாதார துறை சார்பில் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைளையும், மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களிலும், குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள்  முழுமையாக சோதனை செய்யபடுகிறார்கள். உடல் வெப்பநிலையை  அளவிடும் கருவிகள் மூலம் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய விமான நிலையங்களில் பரிசோதனை செய்து வருகிறோம்.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் , மற்றும் அதிகாரிகள் அரசு மருத்துவ மனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தினமும் சராசரியாக 58 லிருந்து 64 விமானங்கள் வருகிறது. இதுவரை 27,706 பேர்களுக்கு சோதனை செய்துள்ளோம்.
குறிப்பாக சென்னை விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 40 லிருந்து 45 வெளிநாட்டு விமானங்கள் வருகிறது. இதில் சராசரியாக ஒரு நாளைக்கு 9000 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோன்று திருச்சி விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 12 அல்லது 13  வெளிநாட்டு விமானங்கள் வருகிறது. அதில்  வரும்   பயணிகளுக்கு காய்ச்சல், குரங்கு அம்மை தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்களை பரிசோதனை செய்து  தனிமைப்படுத்துவதற்கான  தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரபடுத்தி உள்ளோம்.

குறிப்பாக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் சென்னை போன்ற பெரு நகரங்களில் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் குரங்கு அம்மை நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, காய்ச்சல் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது.

கடந்த 2012 ம் ஆண்டு டெங்கு பாதிப்பால், 67 பேர் இறந்துள்ளனர். 2017 ம் ஆண்டு டெங்கு பாதிப்பால் 65 பேர் இறந்தனர். ஆனால் இந்தாண்டு இதுவரை (8 மாதம்)11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  4 பேர்  மட்டுமே இறந்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் மழை தொடர்ந்து அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளதால், காய்ச்சலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் அவற்றை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு தடையை மீறி கருக்கலைப்பு மாத்திரை, போதை மாத்திரை, போன்றவற்றை மருந்து கடைகளில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து, தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டது.

இதில் திருச்சியில் சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் கடை என தெரியவந்தும், உடனடியாக அந்த கடைக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த குடோனில் காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் காலாவதியான பொருட்கள் வைத்து விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *