Skip to content
Home » அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

அரியலூர்… மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 543 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 18.07.2024 தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 09.07.2024 அன்று அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அதன்படி அரியலூர் மாவட்ட அளவில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் வெற்றிப்பெற்ற நல்லாம்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி இரா.ஹர்ஷினி முதல் பரிசு (ரூ.10,000/-), அஸ்தினாபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி கோ.மகாலட்சுமி இரண்டாம் பரிசு (ரூ.7,000/-), அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி சீ.அருந்ததி மூன்றாம் பரிசு (ரூ.5,000/-)-க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி மு.தர்ஷினி முதல் பரிசு (ரூ.10,000/-), காமரசவல்லி அரசு மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி ச.சரிகா ஸ்ரீ இரண்டாம் பரிசு (ரூ.7,000/-), உடையார்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவன் ஷா.பாஷாஜான்

மூன்றாம் பரிசு (ரூ.5,000/-)-க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கினார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு தமிழ் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய உதவி இயக்குநர், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை அரியலூர் அலுவலகத்திற்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.

தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் மூலம், எலந்தக்கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.50,000 கடனுதவி மற்றும் இலுப்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 07 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25,01,000 மதிப்பில் பயிர் கடனுதவிகளும் என மொத்தம் ரூ.25,51,000 மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தம், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சித்ரா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!