Skip to content
Home » எத்தனை கமிட்டி அமைத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது”.. ஹேமா கமிட்டி குறித்து அர்ஜுன் கருத்து!..

எத்தனை கமிட்டி அமைத்தாலும் ஒன்னும் பண்ண முடியாது”.. ஹேமா கமிட்டி குறித்து அர்ஜுன் கருத்து!..

பெண்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இந்த பிரச்னை நடக்கிறது, நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தால்தான் முடியும் என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். நடிகரும், இயக்குநருமான அர்ஜுன் தங்கை மகன், துருவ் சர்ஜா நாயகனாக நடித்துள்ள படம் மார்டின். இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை அர்ஜுன் எழுதியுள்ளார். அடுத்த மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ள மார்டின் படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் அர்ஜுன், படத்தின் நாயகன் துருவா சர்ஜா, நாயகி வைபவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அர்ஜுன் பேசியதாவது, “நான் நிறைய கமர்ஷியல் படம் எழுதி இருக்கிறேன், இயக்கியும் இருக்கிறேன். ஆனால், இந்த படம் அதிலிருந்து நிறைய வேறுபடும். இந்த படத்திற்கு 125 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பின்னர் ஹேமா கமிட்டி தொடர்பாக பேசிய அவர், “என்னுடைய மகளை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறேன். அந்தப் படத்தில் இந்த பிரச்னை தொடர்பான ஒரு காட்சியை எழுதியுள்ளேன். பெண்களுக்கு மட்டும் அல்ல, சமுதாயத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் சினிமாவில் அதை கொஞ்சமாவது காட்ட வேண்டும்.

நாம் இங்கு பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் நாட்டில் எத்தனை பேருக்கு அநியாயம் நடந்து கொண்டிருக்கும். எல்லா இடத்திற்கும் சென்று ஹீரோவால் காப்பாற்ற முடியாது. ஒவ்வொருவருக்கும் தார்மீகப் பொறுப்பு இருந்தால் தான் இது போன்ற விஷயங்களைத் தடுக்க முடியும் என்றார்.

மேலும், உலகத்தில் எல்லா இடங்களிலும் இதுபோல் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் தற்பொழுது அதிகமாகவே நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஒருவரால் மாற்றிவிட முடியாது, அனைவரும் பொறுப்போடு இருந்தால் தான் மாற்ற முடியும். குறிப்பாக, இதுபோன்று எத்தனை கமிட்டிகள் வந்தாலும், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் நிறுத்த முடியும்.

எல்லா இடத்திலும், நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் இது போன்ற பிரச்னைகள் நடக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் தான் நடக்கிறது என்று சொல்லிவிட முடியாது என்றார். மேலும், இந்த விஷயத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தால் தான் முடியும்.

ஒரு சிலர் ஆதாரமில்லாமல் இது போன்ற விஷயங்களை சொல்வதால் அதை நம்பலாமா? வேண்டாமா? என்று தோன்றுகிறது. நிறைய அப்பாவி பெண்கள் இருக்கிறார்கள் அதேநேரம், ஒரு சிலர் இதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!