திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரிக்கு குடிநீர், பேருந்து, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மாணவ, மாணவிகள் கல்லூரி முன் முசிறி – புலிவலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தாசில்தார் சண்முகபிரியா, கல்லூரி முதல்வர் ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக கூறியதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.