கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணவாசியில் TKTPL சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்கு செயல்படும் சுங்கச்சாவடியில் கட்டணங்கள் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
இலகு ரக 4 சக்கர வாகனங்களுக்கு இரு வழி செல்ல 90 ரூபாய் இருந்த நிலையில் 85 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்களுக்கு இரு வழியில் சென்று வர 160 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் அவை 155 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து, லாரிகள் மாத கட்டணங்களுக்கு 15 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இவை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் புதிய கட்டண நிர்ணயம் தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுங்கச் சாவடி நிர்வாகத்திடம் கேட்ட போது ஆண்டுக்கு ஒரு முறை கட்டண திருத்தம் செய்வது வழக்கமான நடைமுறை தான் என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த முறை 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணத்தை குறைத்து நிர்ணயித்துள்ளதாகவும், இந்த கட்டணம் அடுத்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தனர்.
இந்த சுங்கச் சாவடி துவங்கப்பட்டதிலிருந்து இது வரை 3 முறை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இது போன்று பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.