கரூர் மாவட்டம் வெஞ்சமாங்கூடலூர், வெண்ணமலை, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இனாம் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலங்கள் எனக் கூறி அதிலிருந்து விவசாயிகளையும், குடியிருப்பு வாசிகளையும் வெளியேற்றும் பணியில் பல்வேறு நடவடிக்கைகளில், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து பொதுமக்களும், விவசாயிகளும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் இது தொடர்பாக அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் வந்து கூட்டரங்கின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏற்கனவே மனு கொடுத்து இருந்த விவசாயிகளும், பல அதிகாரிகளும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் பல கோரிக்கைகள் இருந்தாலும் இனாம் நிலங்கள் தொடர்பாக பங்கேற்ற விவசாயிகள் பிரச்சினை குறித்து முதலில் பேச அனுமதித்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் கோவில் நிலங்கள் என்று ஒன்றும் இல்லை என்றும், அதற்கான ஆவணங்கள் கோவில்களில் இல்லை என்றும், இது தொடர்பாக யார் மனு கொடுத்தாலும் நீதிமன்றத்தை நாட அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும், வருவாய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று கூட விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது பேசிய ஆட்சியர் தங்கவேல், இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு விரைவில் அழைக்க இருப்பதாகவும், கிராமத்திற்கு 2 பேர் வீதம் பங்கேற்க வேண்டும் என்றார். இதனையடுத்து ஆட்சியரின் பதிலை ஏற்று அவர்கள் அனைவரும் கூட்டரங்கை விட்டு வெளியேறினர். இதனையடுத்து இருக்கைகள் காலி ஆனதால் ஏற்கனவே மனு கொடுத்திருந்த விவசாயிகளும், அதிகாரிகளும் கூட்டரங்கிற்குள் அமர்ந்து கூட்டத்தை தொடங்கினர். இதனால் கூட்டரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.