அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பரை கடத்தி, அவரிடம் இருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள22 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்டதாக கரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் விஜயபாஸ்கர் தலைமறைவானார். பின்னர் அவரை கேரள மாநிலம் திருச்சூரில் போலீசார் கைது செய்து கரூர் கொண்டு வந்து விசாரணை நடத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் தம்பி சேகர் உள்பட மொத்தம் 7 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.எனவே சேகரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதை அறிந்த சேகர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் முன்ஜாமீன் வழங்க மறுத்து விட்டார்.
அத்துடன் சேகரை கைது செய்து விசாரணை நடத்துவது குறித்து விசாரணை அதிகாரி முடிவு செய்துகொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார். எனவே சேகர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.