திருச்சி என்ஐடி மாணவ, மாணவிகள் நேற்று இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் உடை குறித்து தவறாக பேசிய 3 பெண் வார்டன்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்த போராட்டத்தில் குதித்தனர். ஏற்கனவே ஒரு வார்டன் மன்னிப்பு கேட்ட நிலையில் மற்ற 2பேரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம் இன்று காலை வரை நீடித்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி எஸ்.பி. வருண்குமார் என்ஐடி சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து 2 வார்டன்களும் மன்னிப்பு கேட்டனர். எனவே காலை 10 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது. அனைவரும் வகுப்புகளுக்கு புறப்பட்டு செல்வதாக கூறி கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் குறித்து எஸ்.பி. வருண் குமார் கூறும்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கூடாது என மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். அது குறித்து கல்லூரி நிர்வாகமும் உத்தரவாதமும் அளித்துள்ளது. வெளிஆட்கள் கல்லூரி வளாகத்திற்குள் வரும்போது சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பிரச்னை இருந்தால் என்னுடைய நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் என கூறினேன். அனைவரும் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்’ என்றார்.