கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே, தனக்கு சொந்தமான பட்டா நிலம் இருப்பதால் சிமெண்ட் சாலை போட வேண்டாம் என ஒப்பந்ததாரரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது வெள்ளியணை ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார் மற்றும் லோகநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் லோகநாதனை சிவக்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து லோகநாதன் அளித்த புகாரின் பேரில் துணைத் தலைவர் சிவக்குமாரை வெள்ளியணை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி துணைத் தலைவர் சிவக்குமாரின் மனைவி அளித்த பேட்டியில்….
எங்கள் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி கேட்டு கோரிக்கை வைத்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் திமுகவை சேர்ந்தவர் என்பதால், அதிமுகவை சேர்ந்த எனது கணவர் ஊராட்சி துணைத் தலைவர் சிவக்குமார் மீது உள்ள முன்விரோதம் காரணமாக கைது செய்துள்ளனர். லோகநாதன் திமுக கிளைச் செயலாளர் என்பதால் அவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்