மலையாள சினிமா துறையில், நடிகைகள் கடுமையான பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.இது குறித்து விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. ஹேமா கமிட்டி, நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, இதனை அறிக்கையாக கடந்த 2017ம் ஆண்டு தயார் செய்தது.
இந்த அறிக்கை வெளியானால் எங்கு தங்களுடைய பெயர் வெளி வந்துவிடுமோ என்று பயந்து, திரைத்துறையில் உள்ள பெரும் புள்ளிகள், நீதிமன்றத்தை அணுகி, அறிக்கையை வெளியிடாமல் பார்த்துக்கொண்டனர்.
சமீபத்தில் நீதிமன்றம் அறிக்கையை வெளியிட அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த 19ம் தேதி அறிக்கை வெளியானது. இதில், நடிகைகள் சினிமாவில் நடிக்க படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள், நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப் படுகிறார்கள், மீறும் பட்சத்தில் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக மலையாள சினிமா சில மாஃபியாக்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாக கூறியிருந்தது. கேரள மாநில அரசே இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தீவிர நடவடிக்கையை எடுக்க களத்தில் இறங்கியுள்ளது.
இதனையடுத்து பல்வேறு நடிகைகள் தாங்கள் எதிர்கொண்ட, கசப்பான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி சம்பத், தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசியிருந்தது, மலையாள சினிமா உலகில் பெரும் பூகம்பத்தை கிளப்பியிருக்கிறது. அதாவது நடிகரும், மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளருமான சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார்.
அதேபோல மற்றொரு நடிகர் ரியாஸ் கானும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டையடுத்து, பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். மறுபுறம் பெங்காலி நடிகையான ஸ்ரீலேகா மித்ரா, கலாச்சித்ரா அகாதெமியின் தலைவரும், பிரபல மலையாள சினிமா இயக்குநருமான ரஞ்சித் மீது பாலியல் புகாரை எழுப்பினார். இதனை தொடர்ந்து ரஞ்சித்தும் ராஜினாமா செய்தார்.
இப்படி பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது, நடிகைகள் தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இது மோகன்லாலுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது மோகன்லால் மலையாள நடிகர்கள் சங்க(AMMA) தலைவராக இருந்தார். இதன் பொதுச் செயலாளர் நடிகைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது இவருக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் நடிகர்களை இவர் காப்பாற்றுகிறாரா? அப்படி தெரியவில்லையெனில், சக நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் கூட தெரியாமல் எதற்காக சங்க தலைவராக இருக்கிறார்? என்று கேள்வி எழுந்தது. இதனையடுத்து மோகன்லால் உட்பட 17 முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், நடிகை கொடுத்த பாலியல் புகாரின் பேரில், நடிகர் ஜெயசூர்யா மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கழிவறையில் வைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை ஒருவர் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நடிகர் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறினார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக அல்லது சட்டப்பூர்வ தகுதி இல்லை. எனவே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் ஆனி ராஜா வலியுறுத்தி உள்ளார்.
கேரளா போல தமிழ்நாட்டிலும் திரைத்துறையினருக்கு பாலியல் டார்ச்சர் இருக்கிறது என்று கூறிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் இது குறித்து 3 நாளில் கமிட்டில் அமைக்கப்படும். அதில் நடிகைகள் உள்பட 10 பேர் இடம் பெறுவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம் . சினிமா வாய்ப்புக்காக யாரும் செக்ஸ் டார்ச்சர் செய்தால் செருப்பால் அடியுங்கள் என்றார். இதுபற்றி கருத்து தெரிவித்த பல நடிகைகள் எல்லா இடங்களிலும் , குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என அனைத்து திரைத்துறையிலும் பாலியல் டார்ச்சர்கள் இருக்கிறது என்று தங்கள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.