Skip to content
Home » 95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

95 பவுன் நகை பறிப்பு….. திருமங்கலம் பெண் இன்ஸ்பெக்டர் கீதா கைது

  • by Senthil

மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா,  இவரது கணவரும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.  இன்ஸ்பெக்டர் கீதா மீது  பல்வேறு புகார்கள்  உயர் அதிகாரிகளுக்கு வந்தன.  அதுபற்றி துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்  குடும்ப பிரச்னை தொடர்பாக ஒரு தம்பதி விசாரணைக்கு வந்தனர்.  அந்த பெண்ணிடம் 95 பவுன் நகைகளை  பறித்துக்கொண்டார் இன்ஸ்பெக்டர் கீதா.அந்த நகைகளை அடகு வைத்த இன்ஸ்பெக்டர் இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டலும் விடுத்தாராம்.

இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதனால் இன்ஸ்பெக்டர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  தற்போது  இன்ஸ்பெக்டர் கீதா கைதும் செய்யப்பட்டு உள்ளார்.  இதுபற்றிய விவரம் வருமாறு:

பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் அபிநயா என்பவருக்கும்  ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.  சில மாதங்களுக்கு முன்  இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிடவே, அது குறித்த வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

திருமணத்தின்போது தனக்கு  போட்ட 95 பவுன் நகைகளை கணவர் ராஜேஷிடமிருந்து வாங்கித் தரும்படி  அபிநயா  இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கூறி உள்ளார்.  அதன்படி 95 பவுன் நகைகளை  ராஜேஷிடம் இருந்து வாங்கிய  இன்ஸ்பெக்டர் கீதா,  அதை அபிநாயாவிடம் கொடுக்காமல் தானே ஆட்டய போட்டுவிட்டார்.

அபிநயா நகையை கேட்கும்போதெல்லாம் ‘ராஜேஷ் இன்னும் நகையைத் தரவில்லை’ என்றே சொல்லி வந்துள்ளார் இன்ஸ்பெக்டர் கீதா. ஒரு கட்டத்தில் கோபமான அபிநயா குடும்பத்தினர், `நகைகளை திருப்பித் தராமல் ஏன் இழுத்தடிக்கிறீர்கள்?’ என்று ராஜேஷ் குடும்பத்தினரிடம் நேரடியாக கேட்கவே, அதிர்ச்சியான ராஜேஷ், தான் எப்போதோ நகைகளை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டதாக கூற, இதனால் உஷாரான அபிநயா மற்றும் ராஜேஷ் தரப்பினர் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகைகள் என்னாச்சு என்று கேட்டிருக்கிறார்கள்,

எனவே தற்போது கீதாவை போலீசார் கைது செய்துள்ளனர். பறித்த நகைகளை  கீதா அடகு வைத்து தன் சொந்த காரியங்களுக்கு பயன்படுத்திக்கொண்டார். வழக்கு நீண்ட நாள் நடக்கும். அவர்கள் பேசிக்கொள்ள மாட்டார்கள். நாம் முடிந்தவரை சுருட்டிக்கொள்வோம் என நினைத்த கீதா இப்போது கம்பி எண்ணுகிறார்.
கடந்த ஆண்டு  ஒரு வியாபாரியிடம் 10 லட்ச ரூபாயை ஆள் வைத்து பறித்த வழக்கில் மதுரை அடுத்த புதுக்கோட்டை நாகமலை இன்ஸ்பெக்டர் வசந்தி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அந்த சம்பவத்துக்கு முன்பு செக்காணூரணி இன்ஸ்பெக்டர் அனிதா, வழக்கிலிருந்து பெயரை நீக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஷர்மிளாவின் மதுரை வீட்டில் 450 பவுன் நகைகள் திருடு போனது சர்ச்சையாகி வரும் நிலையில், திருமங்கலம் இன்ஸ்பெக்டர் கீதா செய்துள்ள நகை மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!