தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் போதை கலாச்சாரம் பெருகியுள்ள நிலையில், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் விதமாக வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நாடுதழுவிய அளவில் பல்வேறு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி, கருத்தரங்கம் உள்ளிட்ட விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சிகள் மேற்கொள்ள உள்ளதாக திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர் சந்திப்பின்போது, மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தெரிவித்தார்.
மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்… குடிநோயாளிகளின் நாடாக இந்தியா மாறிவருகிறது, பள்ளிமாணவர் தொடங்கி ஆண் பெண் பாரபட்சமின்றி அனைவரும் மதுஅருந்தத் தொடங்கியுள்ளதால் விபத்து மற்றும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறிவரும் சூழலில் மதுவை ஒழிக்கவேண்டிய அரசு டாஸ்மாக் கடையை நடத்திவருவது வேதனை அளிக்கிறது. மதுவை தடை செய்யாமல், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறிவருவதை ஏற்கமுடியாது, பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது என்றும், இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வு நடைபெறுவதாகவும், ஆண்டுக்கு 32 ஆயிரம் பாலியல் வன்புணர்வுவழக்குகள் பதிவுசெய்வதாகவும் மத்தியஅரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. அதேபோன்று தன்பால் உறவுகள், முறையற்ற உறவுகளும் வருங்கால தலைமுறையை நாசப்படுத்தும். எனவே ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க ஜாதி மத பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த விழிப்புணர்வு பரப்புரை நிகழ்வை நாடுமுழுவதும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மகளிரணி நிர்வாகிகள் பைரோஸ், பரக்கத் நிஷா மற்றும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் சிக்கந்தர், மக்கள் தொடர்பு செயலாளர் நவாஸ்கான் ஆகியோர் உடனிருந்தனர்.