ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் இளங்கோவன், மக்கள் நீதி மய்ய அலுவலகம் சென்று கமலஹாசனை சந்தித்து ஆதரவு கேட்டார். அதைத்தொடர்ந்து அவர் செயற்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் இன்று அவர் கட்சின் நிலைப்பாட்டை அறிவித்தார். அதன்படி அவர் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மநீம நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கும் என்றார். அத்துடன் தேர்தல் பொறுப்பாளராக அருணாசலம் என்பவரையும் நியமித்தார். இளங்கோவன் வெற்றிக்காக நானும், கட்சியினரும் இயன்றவரை உதவி
செய்வோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது . கொள்கை வித்தியாசம் இருந்தாலும் தேச நலனுக்காக ஒரே மேடையில் அமர வேண்டும் என்றும் கமல் கூறினார்.
கடந்த மக்களவை தேர்தலில் தனித்து நின்று தோல்வி அடைந்த கமல் , சட்டமன்ற தேர்தலில் சமக, ஐஜேகே போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் கமல் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காத நிலையில் இப்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கமல் ராகுலின் பாத யாத்திரையில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.