கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் கிளப் வைத்து சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அண்மையில் பொறுப்பேற்ற ஃபெரோஸ் கான் அப்துல்லா தனிப்படை அமைத்து சட்டவிரோத சூதாட்டம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து 2 டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர், 20 காவலர்கள் கொண்ட தனிப்படை குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான தகரக் கொட்டகையில், நேற்று நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் நடத்திய சோதனையில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பந்தயப் பணம் ரூபாய் 4 லட்சம், 5 இருசக்கர வாகனங்கள், பேட்டரி லைட், தார்பாய் ஆகிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கரூர் நகர காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.