மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை அளித்தது. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து நடிகைகள் பலர், பாலியல் பலாத்காரம் தொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். நடிகைகளின் பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்த மலையாள நடிகைகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக 7 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விசாரணை தொடங்க உள்ள நிலையில் கேரள திரையுலகமே ஆட்டம் கண்டுள்ளது. மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை ரேவதி சம்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிவிலும் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஸ்கட் ஓட்டலில் 2016-ல் நடந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக ரேவதி சம்பத் அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் சில நாட்களுக்கு முன்பு ரேவதி சம்பத் புகார் அளித்திருந்தார். நடிகை ரேவதி சம்பத் அளித்த புகாரின்பேரில் திருவனந்தபுரம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட நடிகைகள், நண்பர்களிடம் பேசிய உரையாடல் பதிவுகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிடப்பட்டுள்ளது. பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில் மலையாள திரைப்பட நடிகர் சங்கம் நேற்று கூண்டோடு கலைக்கப்பட்டது.