ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், பணி ஓய்வு பலன்கள், ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்டவைகளுக்கான பரிந்துரைகளை, எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்து வருகிறது. ‘இந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை தமிழகம் உட்பட 18 மாநிலங்கள் நிறைவேற்றவில்லை’ என, அனைத்திந்திய நீதிபதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட 18 மாநிலங்களின் தலைமை செயலர்கள் மற்றும் நிதித்துறை செயலர்களை நேரில் ஆஜராகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜராக அனுமதிக்கும்படியும் சில மாநில அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேரில் ஆஜராகாத அதிகாரிகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரன்ட் பிறப்பிக்கப்படும் என, எச்சரித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் உட்பட, 18 மாநில தலைமைச் செயலர்கள் மற்றும் நிதித்துறை செயலர்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வர், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுவதாக 18 மாநிலங்களும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கான பரிந்துரைகள் நிறைவேற்றப்படுவதை, உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ள இரு நபர் கமிட்டி மாதந்தோறும் உறுதி செய்யும்படி உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் எழும் குறைகளை வரும் காலங்களில், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் தீர்த்துக் கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் காலங்களில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி தலைமைச் செயலர்கள் விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.