நாகை மீனவர்கள் நேற்று கடலூக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கோடியக்கரை அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 3 அதிவேக படகுகளில் இலாங்கை கடற்கொள்ளையர்கள் 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கத்தி, தடி, ரப்பர் தடி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் மீனவர்கள் தங்கதுரை, ராஜா, மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் கொள்ளையர்கள் நாகை மீனவர்களின் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள், வலை, மீன்பிடி உபகரணங்கள், பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை கொள்ளையடத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இந்த கொடூர தாக்குதால் நிலைகுலைந்து போன நாகை மீனவர்கள் இன்றுகாலை கரைக்கு வந்தனர். படுகாயமடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இலங்கை ராணுவமும், இலங்கை கடற்கொள்ளையர்களும் தமிழக மீனவர்களை குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இலங்கை அத்துமீறி நடந்து வந்தபோதிலும் மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை அதனால் தான் இலங்கை தினந்தோறும் தாக்குதல் நடத்துகிறது என மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.