தஞ்சாவூர் மாவட்டம் , பட்டுக்கோட்டை அருகே கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வீட்டில் புகையிலை பொருட்களை இருப்பு வைத்திருந்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 60 கிலோ புகையிலைப் பொருட்களையும் கைப்பற்றினர்.
இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள அப்துல்லா என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் நசீர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் உட்பட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் சந்தேகப்படும்படி கார் அருகே நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் பெயர் ஹரிஷ் ராஜ் ரோஹித் என்பதும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காரில் தமிழ்நாடு நம்பர் பிளேட் பொருத்தி பெங்களூரில் இருந்து 600 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை கரிக்காடு குடோனில் இறக்கி வைத்துவிட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான குடோன் உரிமையாளர் ஜெயக்குமாரை தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை பகுதியில் காவல்துறை சோதனையில் 660 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.