அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய நடிகர் ரஜினி, முதல்வர் பதவியை கட்டிக் காக்க பக்கத்து மாநிலங்களில் எத்தனை கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால், அதனை சாதாரணமாக கையாள்கிறார் ஸ்டாலின். பள்ளியில் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிது. ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். இங்கே ஏகப்பட்ட பழையவர்கள் இருக்கிறார்கள். துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அந்த வகையில் ஸ்டாலினுக்கு எனது ஹாட்ஸ் ஆஃப் என்று புகழ்ந்து தள்ளினார். முதல்வர் ஸ்டாலினும் நீங்கள் கூறியது போல் நானும் கவனமாக இருக்கிறேன் என ரஜினிக்கு நன்றி கூறியிருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு வைரலானது.. இது குறித்து இன்று வேலூரில் அமைச்சர் துரைமுருகனிடம் கேட்ட போது, சினிமாவில் கூட பல்லு போன நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது என்று பதில் அளித்தார். பல்லு போன நடிகர் என்று துரைமுருகன் மறைமுகமாக குறிப்பிட்டது ரஜினியை தான் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.