அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ”நீங்கள் நலமா” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அரசு நலத்திட்டங்களின் மூலம் பயனடைந்த பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் “நீங்கள் நலமா” திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு பல்வேறு துறைகளை சார்ந்த அரசு நலத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி நேரடியாக தொலைபேசி வாயிலாக திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்து, திட்டத்தினை செம்மைப்படுத்திடவும், திட்டங்கள் பயன்கள் முழுவதுமாக பயனாளிகளிடம் சென்றடைவதை உறுதி செய்திடவும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற பெண்களுக்கான விதவை உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி பராமரிப்பு உதவித்தொகை, சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டத்தின்கீழ் பயனடைந்து வரும் பயனாளிகளுக்கு நேரடியாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களுக்கான உதவித்தொகை மாதந்தோறும் முழுமையாக கிடைக்கப்பெறுகிறதா எனவும், உதவித்தொகை பயனுள்ளதாக உள்ளதா எனவும், உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் எளிய முறையில் உள்ளதா எனவும், உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் பொழுதும், விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கும் பொழுதும் அரசு அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டறிந்தார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சுமதி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.