Skip to content
Home » சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA) மூலம் விவசாயிகளுக்கான அரசு மானிய திட்டங்கள் அடங்கிய கையேட்டினை கலெக்டர் அருணா, வெளியிட்டு, விவசாயிகளுக்கு வழங்கினார்.

அப்போது கலெக்டர் அருணா  கூறியதாவது:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 833.10 மி.மீ. ஆகும். ஆகஸ்ட் மாத வரையிலான இயல்பான மழையளவு 350.30 மி.மீ. ஆகும். 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி வரையில் 455.30 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21ம் தேதி வரை கிடைக்கப்பெற்ற மழையளவு இயல்பான மழையளவை விட 105 மி.மீ. அதிகமாகும்.2024-2025ம் ஆண்டில் ஜூலை மாதம் முடிய நெல் 7091 எக்டர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 972 எக்டர் பரப்பளவிலும், பயறுவகைப்பயிர்கள் 757 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய்வித்துக்கள் 4334 எக்டர் பரப்பளவிலும், கரும்பு 1417 எக்டர் பரப்பளவிலும், பருத்தி 12 எக்டர் பரப்பளவிலும் தென்னை 13281 எக்டர்பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான ADT54, ADT51 நெல் விதைகள் அனைத்தும் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 2024 மாதத்திற்குத் தேவையான யூரியா விநியோகத்திட்ட இலக்கின்படி 2100 மெட்ரிக் டன்களுக்கு, இதுவரை 1004 மெட்ரிக் டன்களும், டிஏபி உரம் 650 மெட்ரிக் டன்களுக்கு 368 மெட்ரிக் டன்களும் பொட்டாஷ் உரம் 460 மெட்ரிக் டன்களுக்கு 268 மெ.டன்களும், காம்ப்ளக்ஸ் உரங்களைப் பொறுத்தவரை விநியோகத் திட்ட இலக்கான 240 மெட்ரிக் டன்களுக்கு இதுவரை 607 மெட்ரிக்டன்களும் பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் தடையின்றி உரிய நேரத்தில் கிடைக்க, தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது யூரியா 5100 மெட்ரிக் டன்னும், டிஏபி 997 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 806 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 5039 மெட்ரிக் டன்னும், கூட்டுறவு நிறுவனங்கள்மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கத்தில்மட்டும் 875 மெட்ரிக் டன் யூரியா, 295 மெட்ரிக் டன் டிஏபி, 253 மெட்ரிக் டன் பொட்டாஷ், 553 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ்உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யாதேவி, இணை இயக்குநர்(வேளாண்மை) (பொ) ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர். ஜீவா, மாவட்ட வனஅலுவலர் கணேசலிங்கம், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!