நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி ஓட்டுநர். இவரது மகன் ஆகாஷ் (16) வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். ஆகாஷின் வகுப்பில் செல்லிபாளையத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மகனும் படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்துள்ளனர்.
வகுப்பறை வாசலில் ஆகாஷ் கழட்டி வைத்திருந்த காலணி காணாமல் போயுள்ளது. இதனால், மிகவும் கோபமடைந்த ஆகாஷ் என்னுடைய செருப்பை யார் மறைத்து வைத்தீர்கள் என்று கூறி சில மாணவர்களைத் திட்டினாராம். அப்போது, மற்றொரு மாணவர் உன்னுடைய காலணியை நான்தான் எடுத்து வைத்துள்ளேன். எதற்காக திட்டுகிறாய் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, இருவருக்கிமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவா் தாக்கியுள்ளனர். இந்நிலையில், திடீரென ஆகாஷ் சுருண்டு கீழே விழுந்துள்ளார். சிறிது நேரமாகியும் எழுந்திருக்கவில்லையாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஆனால், ஆகாஷ் எழுந்திருக்கவில்லை. சுயநினைவு இல்லாமல் மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். மாணவர்கள் பயந்துபோய் உடனடியாக தலைமை ஆசிரியர் புஷ்பராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக ஆகாஷை ஆம்புலன்ஸ் மூலமாக எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிர் பிரிந்து விட்டது. இதுகுறித்து தகவலறிந்த எருமப்பட்டி போலீஸார் மாணவர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஆகாஷை தாக்கிய மாணவர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே மாணவன் வலிப்பு வந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.